தலிபான்களுடன் சனிக்கிழமை நடக்கவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென்று ரத்து செய்தார். அதிபர் டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்கர்களின் உயிரிழைப்பு அதிகரிக்கும் என்று தலிபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கனில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக தலிபான் அமைப்பினர் மற்றும் ஆப்கன் – அமெரிக்க கூட்டு படைகள் இடையே போர் நடந்து வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர தலிபான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே கத்தாரில் 9 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆப்கன் மண்ணில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தினர். ஆனால் ஒரு சிறிய படைப்பிரிவு ஆப்கனில் நிரந்தரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக தெரிவித்தார்.
இந்நிலையில் தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தத்தை முடிவு செய்ய அவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ரகசிய பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள கேம்ப் டேவிட் என்ற அதிபரின் பண்ணை விட்டில் இந்த பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் கடந்த வியாழக்கிழமை காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றது.
அதை தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.
அதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தைக்காக கேம்ப் டேவிட்டில் முக்கிய தலிபான் தலைவர்கள் காத்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதால் தலிபான்கள் ஏமாற்றமடைந்தனர்.
இது தொடர்பாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் ஞாயிற்றுக்கிழமை செய்தி ஒன்றை வெளியிட்டார். பேச்சுவார்த்தையை திடீரென்று ரத்து செய்த அதிபர் டிரம்பை விமர்சித்தார்.
‘‘அமைதி பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க படைகளும் தலிபான்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டு தான் இருந்தன. அதிபர் டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்காவுக்கு அதிக இழப்புகள் ஏற்படும். அமெரிக்காவின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும். அதிபர் டிரம்பின் அமைதிக்கு எதிரான மனநிலை குறித்து உலகம் அறிந்துகொள்ளும். அமெரிக்கர்களின் உயிரிழப்பும் அதிகரிக்கும்’’ என்று ஜபிபுல்லா முஜாஹித் எச்சரித்துள்ளார்.