குழந்தை சுர்ஜித்தை மீட்கும் இடத்தில் பாறைகள் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணிகளை முன்னெடுப்பது சவாலாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மீட்பு பணிகள் நடைபெறும் பகுதி முழுவதும் கடினமான பாறைகள் சூழ்ந்திருப்பதால் மீட்புப்பணிகள் மிகவும் சவாலாக உள்ளது. ரிக் இயந்திரம் மூலம் இந்நேரம் 90 அடிகள் தோண்டியிருக்க வேண்டும் ஆனால் பாறைகள் மிகமிக கடினமாக இருப்பதால் மீட்பு பணிகள் தாமதமாகின்றன.
எனவே, மாற்றுத்திட்டம் குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறோம். இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
இதேவேளை குழந்தை சுர்ஜித்தை மீட்பது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கவேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறது. குழந்தையை மீட்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சூழல் ஏற்பட்டாலும் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் போல எந்த மாநிலமும் செய்திருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.