இலங்கையுடன் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் அந்த உடன்படிக்கைக்கு இலங்கை நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிக்கவேண்டியது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மிலேனியம் சவால்கள் நிதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதும், இலங்கை அரசாங்கம் அதனை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக அனுப்பவேண்டும், இதுவே சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை என அமெரிக்க தூதரகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்காக வாய்ப்பு நாடாளுமன்றத்திற்கு கிடைக்கும் எனவும் அமெரிக்க தூதரகம் சுட்டிகாட்டியுள்ளது.
நாடாளுமன்றம் உடன்படிக்கை குறித்து ஆய்வுசெய்யும் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் புதிய திட்டங்களை உருவாக்குவதற்குமான அவகாசம் கிடைக்கும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை காரணமாக 11மில்லியன் மக்கள் நேரடியாக பலன்பெறுவார்கள் என்றும் இதனால் பொருளாதார வளர்ச்சி அர்த்தமுள்ளதாக்கப்படும் என்றும் அமெரிக்க தூதரகம் சுட்டிகாட்டியுள்ளது.
இதேவேளை இன்று வெளிநாட்டு உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.