அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதை அடுத்து உ.பி.,யின் அயோத்தி, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்ற விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள கோர்ட், வழிபாட்டு தலங்கள், முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது முதல் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.டில்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யின் வீடு, அயோத்தி நகருக்குள் செல்லும் பாதைகளிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள பள்ளிகளுக்கு பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது. அயோத்தியை தொடர்ந்து ராஜஸ்தானிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதே போன்று கர்நாடகாவிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.