ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளராக களம் இறங்கியுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வவுனியாவில் 993 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதனை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்துடன் வாக்கு கேட்டு வருகிறார்கள் என உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்கக் கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு எனவும் குறிப்பிட்டனர்.
அத்துடன், கோட்டாபயவும், சஜித் பிரேமதாசவும் சமஷ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் என குறிப்பிட்டுள்ள அவர்கள், தமிழர்களின் அரசியல் விருப்பத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் சர்வதேசத்துக்கு காட்டவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியன தமிழர்களின் விருப்பத்தை தீர்க்கவேண்டும் என்று தமிழர்கள் விரும்பினால் இதனைச் செய்யுமாறும் கேட்டுள்ளனர்.