இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தன் மூத்த சகோதரரான முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக இன்று அறிவித்துள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கே தன் பதவியை நாளை ராஜினாமா செய்யவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
கடந்த வாரம் இலங்கையில் நடைபெற்ற பொது தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரும் பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளருமான கோத்தபய ராஜபக்ச 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதை தொடந்து இலங்கை அதிபராக கடந்த திங்கள்கிழமை கோத்தபய ராஜபக்ச பதவி ஏற்றார்.
தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே தன் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்தார்.
‘‘எனது அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலும் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று ஜனநாயக முறைப்படி புதிய அரசு ஆட்சி அமைக்க வழிவிடும் நோக்கத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்று ரணில் விக்கிரமசிங்கே செய்தி வெளியிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கே நாளை அதிகாரப்பூர்வமாக தன் பதவியை ராஜினாமா செய்கிறார்.
இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பதவி ஏற்பார் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் மகிந்த ராஜபக்ச நாளை அதிகாரப்பூர்வமாக இலங்கையின் பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டு இலங்கை அதிபராக பதவி ஏற்ற மகிந்த ராஜபக்ச 2015ம் ஆண்டு வரை அந்த பதவியில் நீடித்தார். இதன் மூலம் ஆசியாவிலேயே நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெயரை மகிந்த ராஜபக்ச பெற்றார்.