தற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா?தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவதே, மனநோயின் வெளிப்பாடு தான். மன அழுத்தம், பிரச்னைகளை எதிர் கொள்ளக்கூடிய திறமை இல்லாதது, எதிர்பார்ப்புகளை மீறி நடக்கும் விஷயங்களை கண்டு பதட்டம், எதிர்காலம் குறித்த பயம், இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள் தீவிரமாகும் போது, மன அழுத்தம் அதிகமாகி, தற்கொலை எண்ணம் வருகிறது.
பிரச்னைகளிலிருந்து முழுமையாக வெளியில் வர, இது தான் தீர்வு என, நம்ப ஆரம்பிக்கின்றனர்.
* சுற்றுச்சூழல் எந்த அளவிற்கு தற்கொலை எண்ணத்தை துாண்டுகிறது?இன்றைய சூழலில், மற்ற அனைத்தை விடவும், பொருளாதாரம் மிக முக்கியமாகி விட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒரு விஷயம் சமூகத்தில் பிரதானமாக இருக்கும். இன்று பணம் சம்பாதிப்பது என்று ஆகிவிட்டது. எல்லாரும் அதை நோக்கியே ஓடுகிறோம். ஒருவர், 30 வயதிற்குள், வீடு, கார் போன்றவை வாங்கியே ஆக வேண்டும் என்பது அடிப்படை தேவைகளாகி விட்டன.
மன நிம்மதி, மகிழ்ச்சி என்பது பொருட்கள் சார்ந்ததாக ஆகி, எல்லா விஷயத்திலும் மற்றவர்களை ஒப்பிட்டு பார்த்து, வசதி என்று நாம் நினைக்கும் விஷயங்களை அடைய முடியாவிட்டால், தோற்று விட்டோம் என்ற எண்ணம் வந்து விடுகிறது. இது தற்கொலையை துாண்டும் முக்கிய காரணி.
* மரபியல் காரணிகள் தற்கொலை எண்ணத்தை துாண்டுமா?குடும்ப உறுப்பினர்களுக்கு மனநோய் பாதிப்பு, மது பழக்கம் இருந்தாலும், அவர்கள் வாரிசுகளுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மதுவிற்கு அடிமையாகி, அந்த பழக்கத்தில் இருந்து வெளியில் வர முடியாதவர்களும், தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
* பள்ளி குழந்தைகள் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்க என்ன காரணம்?மதிப்பெண் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தற்போதைய கல்வி முறை இருப்பதால், எப்படியும் நல்ல மதிப்பெண் பெற்றால் தான் எதிர்காலம் என, மாணவர்களுக்கு அழுத்தம தரப்படுகிறது.இந்த அழுத்தம் தாங்க முடியாமலும், மதிப்பெண்கள் குறைந்தால், எதிர்காலமே போய்விட்டது என்ற அச்சத்திலும், தற்கொலை முடிவு எடுக்கின்றனர். படிப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு துருப்பு தானே தவிர, அதுவே வாழ்க்கை கிடையாது.
* தற்கொலை எண்ணத்தை எப்படி தடுப்பது?தற்கொலை உட்பட எந்தவிதமான எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டாலும், உறவினர், நண்பர்களிடம் பிரச்னையை பேச தயங்கக் கூடாது. பெற்றோர், உறவினர், நண்பர் என்று யாரிடம் தயங்காமல் நம்மால் பேச முடிகிறதோ, அவர்களிடம் முதலில் பேச வேண்டும்.பெற்றோரின் பங்கு இதில் முக்கியமானது. குழந்தைகள், எந்த நிலையிலும் தங்கள் பிரச்னைகளை மறைக்காமல், தயங்காமல் பேசும் அளவிற்கு, இணக்கமான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும்.இது, முதலுதவி சிகிச்சை போல் தான். அடுத்தக்கட்டம், மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண வேண்டும்.