சீன ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார். அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை எதிர்ப்பு தெரிவித்தும் ஜனநாயக ஆட்சி முறையை அமல்படுத்த கோரியும் கடந்த 6 மாதங்களாக ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல உலக நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
ஆனால் ஹாங்காங் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. எனவே ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என சீன அரசு எச்சரித்தது. மேலும் அமெரிக்க அரசு தான் ஹாங்காங் போராட்டக்காரர்களை தூண்டிவிடுவதாக சீனா குற்றம்சாட்டியது.
இருப்பினும் ஹாங்காங் போராட்டத்திற்கு அமெரிக்கா பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் ஹாங்காங் விவகாரத்திலும் சீனா- அமெரிக்கா இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில் ஹாங்காங் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட மசோதா 2019 அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதா சட்டமானால் அமெரிக்காவின் சிறப்பு வர்த்தக அந்தஸ்தை தொடர்வதற்கு தேவையான தன்னாட்சி முறை ஹாங்காங்கில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதா என்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை ஒவ்வொரு ஆண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
ஹாங்காங்கில் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடும் சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்படும். மேலும் இந்த மசோதாவின்படி ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள் உள்ளிட்டவற்றை ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும்.
இந்நிலையில் இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவிற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த மசோதாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளிக்கக்கூடாது என வலியுறுத்தியது. மீறினால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரும் என சீனா எச்சரித்தது.
ஆனால் சீனாவின் எச்சரிக்கையை மீறி அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மசோதாவில் கையெழுத்திட்டார்.
சீனா, சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் ஹாங்காங் மக்கள் மீதான மரியாதையால் இந்த மசோதாவில் கையெழுத்திட்டேன். இந்த மசோதாவால் சீனா மற்றும் ஹாங்காங் பிரதிநிதிகள் தங்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கண்டு அமைதி திரும்ப வழிவகை ஏற்படும் என்ற நம்பிக்கையில் மசோதாவில் கையெழுத்திட்டேன் என அதிபர் டிரம்ப் அறிக்கை வெளியிட்டார்.
சீனா கண்டனம்
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்
‘‘அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை சீனாவின் உள்நாட்டு விவகாரமான ஹாங்காங் விவகாரத்தில் தலையிடுவதாகும். இது சர்வதேச சட்டத்திற்கும் சர்வதேச உறவுகளை வழிநடத்தும் விதிமுறைகளுக்கும் எதிரானது’’
‘‘அமெரிக்கா இதுபோன்ற தவறான பாதையில் செல்வதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் சீனா தக்க பதிலடி கொடுக்கும். அதன் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரும்’’ என சீன வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.