இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிவிதுரு ஹெலஉறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக அந்நாட்டு ஆளும் கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சி கடந்த 25ஆம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது.
அதில் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வாக இந்த நாட்டில் இரண்டு அரசுகளை உருவாக்க வேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதாவது, உலகம் பூராகவும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் சர்வதேச ஆரம்ப கர்த்தாக்களுக்கு எமது ஆதரவை வழங்குவதுடன் சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு போன்ற தற்போது அல்லது முன்னர் இருந்த பிரச்சினை இருக்கும் வலயங்களுக்கு தீர்வாக இரண்டு அரசுகள் உருவாக எமது ஆதரவை வழங்கிவருவோம் என தெரிவிக்கப்படுள்ளது.
தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஈழம் அல்லது வேறு பெயரிலோ தமிழ் அரசு ஒன்று இருந்ததில்லை.
இதனால் இவ்வாறான அரசு ஒன்றுக்காக தலையீடு செய்வதற்கு அவர்களுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.