முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை நந்திக்கடல் பேசுகிறது எனும் நூலில் தொகுத்துள்ளார் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா.
ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டே ஆக வேண்டும் என்பது உள்ளிட்ட வேறொரு தளத்திற்குச் சென்று விட்டதென்பது எவரும் அறியாததல்ல. ஆனாலும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான பத்து ஆண்டுகளில், குறிப்பாக 2020ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையிலும் எழுபது ஆண்டுகாலப் போராட்டத்தின் பட்டறிவுகளுடன் கூடிய அரசியல் விடுதலைக்கான செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் பலவீனமடைந்துள்ளதாகவே கருதமுடியும்.
ஆவணப்படுத்தல், புள்ளி விபரங்களைச் சேகரித்தல், வரலாறுகளை ஒழுங்குபடுத்திச் சமகால இளம் சமுதாயமும் எதிர்காலச் சமுதாயமும் அறிந்து கொள்ளக் கூடிய எந்தவொரு தயார்ப்படுத்தல்களிலும் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் இந்தப் பத்து ஆண்டுகளில் ஈடுபட்டதாக அல்லது அதற்கான முயற்சி எடுத்ததாகக் கூறவே முடியாது.
கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து வெளிவரும் பிரதான செய்தி நாளேடுகள், வாரப் பத்திரிகைகள் அவ்வப்போது செய்திகளையும் செய்தி விமர்சனங்களையும் சில ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வெளிவரும் ஈழத்து இலக்கியங்களிலும் கவிதைகளிலும் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான கருத்துக்கள், பட்டறிவுகள் குறிப்பிட்டளவு தென்படுகின்றன.
யாழ்ப்பாணம், புலம்பெயர் நாடுகளையும் மையமாகக் கொண்டு இயங்கி வரும் தொலைக்காட்சி உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்களும் அவ்வப்போது ஈழத் தமிழர்களின் போராட்டங்களையும் அதன் பின்னரான அவலங்களையும், வாழ்க்கை முறைகளையும் செய்தி ஆவணங்களாகவும், காட்சிகளாகவும் ஒளி, ஓலி வடிவங்களில் வெளியிட்டு வருகின்றன.
ஆனாலும் அவை முழுமையானவை என்று கூற முடியாது. அவ்வாறான சிலவற்றில் பற்றாக்குறைகள் உண்டு, தகவல் பிழைகளும் உண்டு, கற்பனைத் தன்மைகளும் உள்ளன. ஈழத் தமிழர்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை, மரபுரிமை போன்ற அரசியல் விடுதலைக்கான சிந்தனை உணர்வுகளின் பிரதிபலிப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலையிலேதான் நந்திக்கடல் பேசுகின்றது என்ற நூல் வெளி வந்திருக்கின்றது. போர் நடைபெற்றபோது தாயகத்தில் வாழ்ந்த சாதாரண மக்கள், துறைசார்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் ஆகியோரிடம் இருந்து அனுபவங்களின் அடிப்படைகளில் ஆக்கங்கள் பெறப்பட்டுள்ளன.
தனியொருவருடைய கருத்தாக அல்லாமல் பல்வேறு ஆளுமைகளின் எழுத்தாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது என்கிறார் தமிழ் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான விஜயகுமார் நவநீதன்.
இந்த நூல் ஈழத் தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தியுள்ளது. இதில் வெளி வந்துள்ள ஆக்கங்கள் அனைத்தும் வெறுமனே கற்பனைகள் அல்ல, நிஜங்கள், உண்மையான புள்ளி விபரங்கள், ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறியுள்ளார்.
இந்த நூலில் நாற்பது தலைப்புகளில் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கனடாவில் வாழும் பேராசிரியர் சேரன், ருவாண்டா மற்றும் இலங்கை- இரு இனப் படுகொலைகளின் கதைகள் என்ற தனது கட்டுரையில் வெளியக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இறைமையை ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டும் என்ற கருத்தை உறுதிப்படக் கூறுகிறார். அத்துடன் தமிழ் இனப் படுகொலை என்பதை சேரன் அழுத்தம் திருத்தமாக முன் வைக்கிறார்.
ஆனால் பொறுப்புக் கூறல் விடயத்தில் அவருடைய கருத்து முன்னுக்குப் பின் முரணாகவேயுள்ளது. அதாவது புலிகள் மீதும் போர் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உண்டு என்பதைப் பேராசிரியர் சேரன், தனது நேரடிக் கருத்தாக அல்லாமல், பிறர் கூற்றாகவே மேற்கோள் காண்பிக்கின்றார் என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலையை வெளிப்படுத்த வேண்டும் என்ற அறம் சார்ந்த சிந்தனையில் ஈழத் தமிழ்ப் புலமையாளர்கள், சர்வதேச ஆதரவற்ற நிலையில் தனித்து நின்று போராடிய இயக்கம் ஒன்றின் மீது ஓர் அரசுக்குரியதான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஆரோக்கியமான விமர்சனம் அல்ல என்ற கருத்துக்களும் உண்டு.
அதுவும் பலநூற்றாண்டுகளின் பின்னரான சூழலிலும் ஈழத் தமிழர்களின் போராட்டம் பற்றிய நியாயப்படுத்தல்களை வெளிப்படுத்தும் ஆவணங்களில் எழுதப்படும் கட்டுரைகளின் வெளிப்படைத் தன்மைகளில் போராட்டத்தின் அறம் பேசப்பட வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பு. ஈழத் தமிழர் போராட்டம் பற்றிய எதிர்மறையான பிறர் கூற்று, ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புப் பற்றிய ஆவணங்களில் அவசியமற்றவை என்ற கருத்துக்களே சமூகத்தில் அதிகமாக நிலவுகின்றன.
இந்த நூலில் தமிழர் கடல் என்ற கட்டுரையில், இலங்கைத் தரப்பின் அரச இறைமை என்ற கோட்பாட்டைப் பின்னிப்பிணைக்கும் சட்டச் சொற் பிரயோகங்களுக்குள் விடுதலைப்புலிகளைத் தந்திரோபாயமாகச் சிக்கவைத்து, தம்மைத் தாமே ஓர் அரசற்ற தரப்பு என்று அவர்களையே ஒத்துக்கொள்ளவைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
ஆயினும், தமிழர் இறைமையை இராஜதந்திர வழிகளில் சரணாகதியாக்கச் செய்யும் தந்திரோபாயத்துக்குள் மாட்டிக்கொள்ளாத வகையில் தமது நகர்வுகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என்பது பலரும் அறிந்திராத ஒன்று என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நெற் ஆங்கிலச் செய்தித்தள பிரதம ஆசிரியர் ஜெயா இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.
யுத்தத்தின் பச்சை முகம் என்ற கட்டுரையை பொ.ஐங்கரநேசன் எழுதியுள்ளார். அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்கில் சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் இயற்கை அழகு சீரழிக்கப்படுகிறது, காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்பதைக் கட்டுரையாளர் விமர்சிக்கிறார்,
வீடுகள், ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் திடீர் வளர்ச்சிகள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு ஈடான நிதியைப் பெறுவதாகவும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட முன்னர் உடனடிப் பிரச்சினைத் தீர்வுகளுக்கு அரைகுறையான நடவடிக்கைகளை முன்னெடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலையைக் கொச்சைப்படுத்துகின்றனர் என்ற தொனியிலான குற்றச்சாட்டையும் கட்டுரையாளர் முன் வைக்கிறார்.
இவ்வாறு இந்த நூலில் உள்ள கட்டுரைகள் ஈழத் தமிழ்ப் போராட்டத்தையும் அதன் நியாயத்தையும் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் நிகழ்வில் இந்த நூலைத் தொகுத்தமைக்கா தொகுப்பாசிரியர் ஜெராவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்ப் பரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இனப்படுகொலை பற்றிய விடயங்களை ஆவணப்படுத்தியுள்ள இந்த நூலுக்கு தமிழரசுக் கட்சி விருது கொடுப்பதா என்ற கேள்விகளும் குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் விருதைத் தேடிப் போகவில்லை. விண்ணபித்தும் விருது பெறவில்லை என்கிறார் இந்த நுாலின் தொகுப்பாசிரியா் ஜெரா. தமிழரசுக் கட்சி தாமாகவே அழைத்தார்கள். தற்போதைய அரசியல் சூழலில் பலரோடும் இணைந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் அந்த விருதுக்கான அழைப்பை சங்கடமானதொரு நிலையில் ஏற்றுக் கொண்டதாகவும் ஜெரா கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
இந்த விருது வழங்கப்பட்டதால் நந்திக்கடல் பேசுகிறது என்ற நூலுக்கோ, அதன் தொகுப்பாசிரியர் ஜெராவுக்கோ பெருமையல்ல. மாறாக தமிழரசுக் கட்சியின் விருதுக்குத்தான் பெருமை என்கிறார் நவநீதன்.
அந்த விருதை தொகுப்பாசிரியர் பெற்றுக் கொண்டதை தான் தவறாகப் பார்க்கவில்லை என்றும் நவநீதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த நூல் பற்றிக் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறைத் தலைவர் கலாநிதி எஸ்.ரகுராம், இது ஒரு வரலாற்றுப் பதிவு என்று கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் தமிழர்களின் பாதையில் அவர்கள் அடைந்துள்ள ஏமாற்றங்களை, முக்கியமான திருப்பங்களை, சவால்களைச் சொல்வதாக இந்த நூல் அமைவதாகவும் அவர் கூறுகிறார்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான பத்து ஆண்டுகளிலே எதனைத் தந்திருக்கின்றன என்பதைத் திரும்பிப் பார்ப்பதாக இந்த நூலின் பதிவு அமைந்துள்ளது என்றும் ரகுராம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.
நந்திக்கடல் பேசுகிறது என்ற நூல் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை ஆகிய தாயகப் பி்ரதேசங்களிலும் புலம்பெயா் நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் நூல் பற்றிய விமர்சனங்களும் அந்த நிகழ்வுகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் 2009 ஆண்டுக்குப் பின்னரான சூழலில் குறிப்பாக அரசியல் சூழலில், தமிழர் பண்பாட்டுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக நூலின் தொகுப்பாசிரியர் ஜெரா கூர்மைச் செய்தித் தளத்தி்ற்கு வழங்கிய நேர்காணலில் கூறுகிறார்.
வெறுமனே வார்த்தைச் சோடனைகளாகவோ அல்லது ஆய்வு அறிக்கைகளாகவோ அல்லாமல் மக்களிடம் நேரடியாகப் பெற்ற அவர்களுடைய அனுபவங்களின் பகிர்வாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறான ஆவணங்கள் தொடர்ச்சியாகவும் பகுதி பகுதியாகவும் வெளிவர வேண்டும். அத்துடன் ஆங்கில மொழியிலும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.
இந்த நூலில் நாற்பது தலைப்புகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு;
நந்திக்கடல்- சுதந்திர வேட்கை – பேராசிரியர் யூட் லால், விடுதலையின் இறுதி நாட்கள் அவை- முகில்நிலா, நலன்புரி எனும் நரகம்- தொகுப்பாசிரியர், உயிர்வாழ்வதற்காக உயிரைப் பணயம் வைத்தல்- இளைய வன்னியன்,
இரும்புத்துண்டுகளுடன் வாழும் மனிதர்- தொகுப்பாசிரியர், மரணச்சான்றிதழ் வேண்டாம்- தொகுப்பாசிரியர், படத்தில் இருப்பது அப்பாதான்- தொகுப்பாசிரியர், போராடி – தொகுப்பாசிரியர், தண்டிக்கப்படும் நிராயுதபாணிகள்- தொகுப்பாசிரியர் இந்த வாழ்க்கை நரகமா இருக்கு- தொகுப்பாசிரியர், கையேந்தும் கலாசாரத்தை தந்துவிட்டுப்போன 2009- செ.ராஜசேகர், போருக்குப் பின்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்-தெய்வீகபாலன் சந்திரகுமார்,
இனவழிப்புப் பின்னணியில் தமிழ் பெண்கள்- பரணி கிருஷ்ணரஜனி, இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்-தொகுப்பாசிரியர், தமிழர் தாயகக் கோட்பாட்டை கேள்விக்குட்படுத்துவதே மகாவலி திட்டத்தின் இலக்கு- வி.நவநீதன், தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்ச்சியை சிதைக்கும் வெலிஓயா- பேராசிரியர் அ.சூசை, ஒரு தேசமாகத் திரள்வது எங்கிருந்து தொடஙகுவது- நிலாந்தன், வவுனியா வடக்கில் மீளக்குடியேறலாமா – தொகுப்பாசிரியர், தென்கரையாக விழுங்கப்படும் வவுனியா வடக்கு- தொகுப்பாசிரியர், கேப்பாப்புலவு நிலமே எங்கள் உரிமை- தொகுப்பாசிரியர்,
தண்ணீர்தான் பிரச்சினை தண்ணீருக்கு நடுவில் இருக்கும் தீவு- தொகுப்பாசிரியர், புல்மோட்டையில் திடீர் குடியேற்றங்கள்- தொகுப்பாசிரியர், தமிழர் நீக்கம் செய்யப்படும் தமிழர் தலைநகர்- ஜெனோஜன், கன்னியா- சுடும் நிலம்-திருமலை நவம், சூழல் அரசியலும் நில அபகரிப்பும் -யுத்தத்தின் பச்சை முகம் பொ.ஐங்கரநேசன், சிறைக்குள்ளயே சாகடிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் – சக்திவேல் அடிகளார், அம்மா இருக்கும் வீட்டைவிட அப்பா இருக்கும் சிறை மேல்- மு.தமிழ்ச்செல்வன், வாழ்வோடு ஒட்டிக்கொண்ட போரின் வடு- தொகுப்பாசிரியர்,
வலிகளை வலிமையாக்குதல்- ஞானதாஸ் காசிநாதர், சூறையாடப்படும் நெய்தல்- தொகுப்பாசிரியர், வன்னிக்குள் மலையை மையப்படுத்திய செய்திகள்- கே.குமணன், தமிழர் கடல்- ஜெயா இலங்கையின் நீதி- தொகுப்பாசிரியர், போருக்குப் பின்னான பத்தாண்டுகளில் தமிழ் ஊடகத்துறை- கலாநிதி.சி.ரகுராம், பத்தாண்டுகளில் ஈழப்பிரச்சினையை தமிழகம் கையாண்ட விதம்- சரவணன், வேர்கள் அறியா விருட்சம்- ட்ரைடன் கே. பாலசிங்கம், பத்தாண்டுகளில் முள்ளிவாய்க்கால் மரபு -பாசன அபேவர்தன, ருவாண்டா மற்றும் இலங்கை- இரு இனப் படுகொலைகளின் கதைகள்- பேராசிரியர் சேரன் மற்றும் ஷெர்ரி ஐகன் பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தில் நினைவுத்திறன்- எழில்ராஜன் அடிகளார், முள்ளிவாய்க்கால் 2019- தொகுப்பாசிரியர், பத்துவருட நிலுவை- இங்கிருந்து எங்கு- சஞ்சுலா பியற்றர்ஸ், நந்திக்கடல் கோட்பாடுகள் – பரணி கிருஸ்ணரஜனி.
ஊறுகாய் இணைய ஊடகத்தின் வெளியீடாக ஊடகவியலாளர் ஜெரா தம்பியினால் தொகுக்கப்பட்ட, பின் போர்காலத்தை எழுத்தாவணமாகக் கொண்ட “நந்திக்கடல் பேசுகிறது” நூல் வெளியீடு இன்று (13) காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம், கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது.
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர் ‘மேஜர் சோதியா’ அவர்களின் தாயார் நிகழ்வின் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததுடன், நூலின் முதல் பிரதியையும் அவர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சி.ரகுராம், முன்னாள் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் வி.நவநீதன் ஆகியோர் காரண உரைகளை நிகழ்த்தினர். மேலும் அருட்தந்தை இ.ரவிச்சந்திரன் அடிகளார் வெளியீட்டுரை ஆற்றினார்.