இந்த ஆண்டிற்கான உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான மாநாட்டின் தலைமைப் பதவி சிறிலங்காவிற்கு வழங்கப்படவுள்ளது. இந்தத் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பங்கேற்கும் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான 4 நாள் மாநாடு ஜெனீவாவில் இடம்பெற்றது. இம் மானாட்டில் ஜெனீவாவிலுள்ள சிறிலங்காவிற்கான பிரதிநிதியான ஏ.எல்.ஏ.அஸீஸ் கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டு தலைமைத்துவத்தை பேணிவந்த பிரான்ஸிடம் இருந்து தலைமைத்துவத்தை சிறிலங்கா பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த பதவியின் சாசனம், உயிரியல் மற்றும் நச்சுத் தன்மையான ஆயுதங்களின் பயன்பாட்டை நாடுகள் பயன்படுத்துவதை தடை செய்கின்றன.
உயிரியல் ஆயுதங்களை மேம்படுத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல், நச்சுத் தன்மையான ஆயுதங்கள் மற்றும் அதன் அழிவுகளை தடை செய்தல் சாசனம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பாரிய அழிவைத் தரும் ஆயுதங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச ரீதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கங்களின் முயற்சியாகவும் இந்த சாசனம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா அரசாங்கத்தை போர்க்குற்றம் புரிந்த நாடாக பிரகடனப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என தமிழர்கள் கோரி வரும் இவ்வேளையில், கோத்தபயா ராஜபக்ஸ ஓர் போர்க் குற்றவாளி என பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வேளையில் சிறிலங்காவிற்கு உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான தலைமைத்துவத்தை வழங்கியிருப்பதானது, தமிழர்களை அதிருப்தி கொள்ள வைப்பதுடன், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.