பிரித்தானியாவில் நேற்று(12) நடைபெற்ற பொதுத் தேர்தல் இரவு 10மணிக்கு நிறைவடைந்தது. வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று பிரித்தானிய நேரம் காலையில் முடிவுகள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுகளின்படி ஆளும் கொன்சவேட்டிவ் கட்சி 364ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெரமி கோர்பினின் தொழிற்கட்சி 203 ஆசனங்களை மட்டுமே பெறும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயகக் கட்சி 12 ஆசனங்களையும், எஸ்.என்.பி எனப்படும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 48 ஆசனங்களையும் பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கன்சவேட்டிவ் கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் என்ற கொள்கையை தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளியிட்டிருந்தது.
தொழிற்கட்சி, ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்ற கொள்கையை தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தேசங்கள் என்ற கொள்கை சில நாடுகளில் உள்ள அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் என்ற கருத்தை தெரிவித்த பழமைவாதக் கட்சியின் தேர்தல் அறிக்கை பல வாதங்களைத் தோற்றுவித்திருந்ததும், பின்னர் தமது தேர்தல் அறிக்கை சிறீலங்காவுக்கு பொருந்தாது என அவர்கள் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.