ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பணியாற்றி வரும், 4,000 அமெரிக்க துருப்புகளை மீள அழைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையத் தொடங்கி சமாதான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு வசதியாக, செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தின்படி 4,000 வீரர்களைத் திரும்பப் பெற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்துக்குள் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். எனினும், அந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கான திகதி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் 13,000 அமெரிக்கப் படையினரில் 4,000 பேரை திரும்ப அழைக்க ட்ரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ள நிலையில், அவர்களில் சிலர் மீண்டும் ஆப்கானிஸ்தான் அனுப்படலாம். ஆனால், ஏராளமானவர்கள் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் தலைநகர் டோஹாவில் 9 கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும் சூழல் கடந்த செப்டம்பர் மாதம் உருவானது.
அப்போது உருவாக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தில், பயங்கரவாதத் தாக்குதல்களை தலிபான்கள் கைவிட வேண்டும் என்பதுடன், ஆப்கானிஸ்தானிலிருந்து கணிசமான அமெரிக்க வீரர்கள் திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், தலிபான்களின் தொடர் தற்கொலைத் தாக்குதல்களினால் ஆத்திரம் கொண்ட அமெரிக்கா, தலிபான்களுடனான பேச்சுவார்த்தை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.