பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை (12) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பழமைவாதக் கட்சி மிகப்பெரும் வெற்றியீட்டியுள்ளது. பிரித்தானியாவின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான தொழிலாளர் கட்சி பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரித்தானியா பிரதமர் பொhரிஸ் ஜோன்சன் 78 ஆசனங்களை அதிகமாகப் பெற்று மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெற்றியை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா மகாராணியை பக்கிங்கம் அரண்மனையில் சந்தித்த ஜோன்சன் தான் பிரதமராக பதவியேற்பதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் தமது திட்டத்திற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி 31 ஆம் நாள் அது நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு ஆண்டு அன்றைய பிரதமர் மாக்கிரட் தச்சர் மூன்றாவது தடவை பெற்ற பெரும்பான்மை ஆசனங்களுக்குப் பின்னர் கிடைத்த பெரும் வெற்றியாகும்.
இறுக்கமான போட்டியில் இருந்த தொழிலாளர் கட்சி 1935 ஆம் ஆண்டு சந்தித்த மிகப்பெரும் சரிவுக்கு பின்னர் மிகப்பெரும் பின்னடைவை தற்போது சந்தித்துள்ளது. இந்த தோல்வியைத் தொடர்ந்து கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜெரமி கோர்பைன் தெரிவித்துள்ளார்.
இது மிகப்பெரும் தோல்வி, என்னை தனிப்பட்ட முறையில் ஊடகங்கள் தவறாக விமர்சித்திருந்தன என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பழமைவாதக் கட்சி 364 ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 203 ஆசனங்களையும், ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 48 ஆசனங்களையும், மிதவாத ஜனநாயகக் கட்சி 11 ஆசனங்களையும் ஏனைய ஆசனங்களை சிறிய கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் கைப்பற்றியுள்ளனர்.
வட அயர்லாந்தில் போட்டியிட்ட அயர்லாந்து புரட்சிகர இராணுவத்தின் அரசியல் பிரிவான சின்பெய்ன் கட்சி ஏழு ஆசனங்களை வட அயர்லாந்தில் கைப்பற்றியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவின் நோக்கத்தை நிறைவேற்றுவது என்பதே பழமைவாதக் கட்சியின் தேர்தல்; அறிக்கையின் முக்கிய அம்சமாக இருந்தது. அதற்கு மக்கள் வழங்கிய ஆணையாகவே இந்த வெற்றி அமைந்துள்ளது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்தை நிறுத்துவது அல்லது மற்றுமொரு வாக்கெடுப்பை மேற்கொள்வது என்ற கருத்துக்களை முன்வைத்த கட்சிகள் அனைத்தும் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளன. இந்த தோல்வி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதி எனபதைக் காண்பித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் பிரித்தானியாவில் உள்ள அரசியல் கட்சிகளை அரசியல் வேறுபாடின்றி ஆதரித்து வருவதுடன் முக்கிய கட்சிகளுடன் மிகவும் நெருக்கமான பிணைப்புக்களையும் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் பழமைவாதக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இரு தேசங்கள் என்று வெளியிடப்பட்ட கொள்கை தொடர்பில் சிறீலங்கா அரசு அதிக சீற்றம் அடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து பழமைவாதக் கட்சி தனது நிலைப்பாட்டை மறுத்திருந்தது. ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் புதிய பிரித்தானியா அரசுடன் நெருக்கிமான உறவுகளைப் பேணுவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.