புதிய வருட ஆரம்பத்தில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனை வெள்ளை மாளிகைக்கு வருமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் பொரிஷ் ஜோன்சன் தலைமையிலான கென்செர்வேற்றிவ் கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சந்திப்பில் அமெரிக்க – பிரித்தானிய இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் பொரிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியவுடன் பிரித்தானியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.
குறித்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா மேற்கொண்டதை விட பெரிய ஒப்பந்தமாகவும், அதிக இலாபம் மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடியதுமாக இருக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்தும் இருவரும் வெள்ளை மாளிகை சந்திப்பில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.