சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக உண்மையின் சக்தியால் தொடர்ந்து போராடுவோம் என திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
பீகாரின் புத்த கயை நகரிலுள்ள மகாபோதி கோயிலுக்கு ஆண்டுதோறும் இரு வார கால பயணமாக தலாய் லாமா விஜயம் செய்வதுண்டு. இதன்படி, புத்தகயையில் உள்ள மகாபோதி கோயிலில் நேற்று (புதன்கிழமை) வழிபாடு நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “ஆயுத பலத்துடன் உள்ள சீனாவுக்கு எதிராக, உண்மையின் சக்தியால் தொடா்ந்து போராடுவோம். சீனாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அங்கு திபெத்திய பெளத்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
சீனாவானது பாரம்பரிய அடிப்படையில் ஓர் பெளத்த நாடாகும். அங்கு பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் இருந்தபோதிலும், பெளத்த மதத்தினர் அதிகம் உள்ளனர். பெரும்பாலான மக்கள் திபெத்திய பெளத்த மதத்தை பின்பற்றுக்கின்றனர். சீன பல்கலைக்கழகங்களில் திபெத்திய பெளத்த மத ஆய்வாளர்கள் ஏராளமாக உள்ளனர்.
இதேவேளை, இந்தியாவினுடைய பழங்கால கல்விமுறையானது, அமைதி, இரக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகும். இரக்க குணம் இல்லாவிடில் மனிதா்களால் எதுவும் செய்ய இயலாது.
மதம் என்ற பெயரில் உலகமே வன்முறையில் சிக்கித் தவித்து வருகிறது. எனவே, மனித மாண்புகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.