இனப்படுகொலை தொடர்பாக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மார் அரசு நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை ஏற்கனவே விசாரித்திருந்தாலும், தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடந்துள்ள இனப்படு
கொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பான முதல் விசாரணை இது.
ஏற்கனவே, முன்னாள் யூகோஸ்லாவியா உட்பட ஒரு சில நாடுகள் மீது இனப்படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. அவை அந்ததந்த நாடுகளிலேயோ அல்லது அருகிலுள்ள நாடுகளிலேயோ வைத்து விசாரிக்கப்பட்டள்ளன.
ஆனால், ஹேக்கில் உள்ள நீதிமன்றம் இனப்படுகொலை தொடர்பான வழக்கொன்றை நேரடியாகத் தன் கையிலெடுத்து விசாரித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவே ரோஹிங்கியாக்களுக்கு கிடைத்த முதல் பெரும் வெற்றியாகக் கருதப்படுகின்றது.
மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா இனத்திற்கு எதிராக இனஅழிப்பு நடைபெற்றதாக குற்றம்சாட்டி, முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா, நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்ந்திருந்தது.
ரோஹிங்கியாக்களுக்கு எதிராக மியன்மார் அரசு மேற்கொண்ட இனப்படுகொலையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் 11ம் திகதி சர்வதேச நீதிமன்றில் தனது 46 பக்க விண்ணப்பத்தை கம்பியா தாக்கல் செய்திருந்தது.
இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது குறித்த ஐ.நா.வின் 1948ம் ஆண்டு உடன்
படிக்கையின் கீழ், சர்வதேச சட்டத்தை மீறியதாகக் குற்றம்சாட்டி, உறுப்பு நாடுகள் மற்ற உறுப்பு நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.
அதன் அடிப்படையிலேயே மியன்மார் அரசுக்கு எதிராக கம்பியா இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினரான கம்பியா, மியான்மருக்கு எதிரான வழக்கைத் தயாரிப்பதில் சட்டரீதியாக முன்னிலை வகித்துள்ளதுபோதும், இதற்கு பிற முஸ்லிம் நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன.
அந்த விண்ணப்பத்தில் கம்பியாவின் துணைத் தலைவர் இசடோ டூரே, ‘மனித உரிமை தொடர்பாக ஒரு சிறிய நாட்டின் பெரிய குரல். கண்டத்திலும் அதற்கு அப்பாலும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த டிசெம்பர் 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை மூன்று நாட்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா ஆட்சியாளர்களின் இனப்படுகொலை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தியவருமான நவநீதம்பிள்ளை மற்றும் முன்னாள் சாட் ஜனாதிபதி ஹிசீன் ஹப்ரே மீது வழக்குத் தொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் ஆணையாளர் ரீட் பிராடி உட்பட 17 மிக முக்கிய நீதிபதிகள் முன்பாக இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த வழக்கில், குற்றம்சாட்டிய கம்பியா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மியன்மார் ஆகிய இரு தரப்பிற்கும் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து தங்கள் தங்கள் கருத்தை முன்வைக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.
இதன் முதல் நாள் விசாரணையில் இந்த வழக்கைத் தாக்கல் செய்தது தொடர்பாக கம்பியா நீதி அமைச்சர் அபுபக்கர் தம்பாடு(Abubacarr Tambadou) முன்னிலையாகி நீண்ட விளக்கம் அளித்தார். அதில் அவர் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களை முன்வைத்தார்.
இதேவேளை, ரோஹிங்கியாக்களுக்கு எதிராக மியன்மார் இனப்படுகொலை செய்து வருவதாகவும், அந்நாட்டில் சிறுபான்மையினர் கடுமையான ஆபத்தில் உள்ளனர் என்பதையும் நிரூபிப்பதிலும் கம்பிய வழக்கறிஞர்கள் அதிக சிரத்தை காட்டியிருந்தனர்.
மியன்மார் சொந்த மக்களின் மீதான இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மியான்மர் இராணுவம் 2017 நடவடிக்கையில் ‘இனப்படுகொலை நோக்கத்துடன் கொலைகளையும் பாலியல் வல்லுறவுகளையும் புரிந்தது’ என்ற ஐ.நா. சபையின் புலனாய்வாளர்களின் கண்டுபிடிப்பு அறிக்கைகளை அங்கு குறிப்பிட்டுக் கூறினர்.
இராணுவம் தனது ஒடுக்குமுறையைத் தொடங்கிய பின்னர் 730,000ற்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் மியான்மரை விட்டு வெளியேறி வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றனர் என்பதையும் 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ள ஆதாரங்களையும் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, இந்த விவாதங்களை மறுத்துரைக்கும் வகையில் மியன்மாரின் சார்பில் அந்நாட்டு அரசின் ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சாங் சூகி தலைமையிலான அணி பிரசன்னமாகியிருந்தது.
இரண்டாவது நாள் விசாரணையில் ஆங் சாங் சூகி மிக நீண்ட மறுப்பு விளக்கத்தை அளித்தார். கம்பிய நாட்டு அதிகாரிகள் ‘முழுமையற்ற மற்றும் தவறான படத்தை வரைகிறார்கள்’ என்று குற்றம்சாட்டினார். ‘சர்வதேச மனிதாபிமான சட்டத்தை புறக்கணித்து சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு சேவைகளின் உறுப்பினர்களால் சமமற்ற சக்தி பயன்படுத்தப்பட்டது என்பதை மறுக்க முடியாது’ என்று அவர் ஒப்புக் கொண்டார்.
‘அவ்வாறு செய்த படையினர் மீது வழக்குத் தொடரப்படும்’ என்றும் அவர் கூறினார்.
‘மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யும் நோக்கில் இராணுவம் செயல்படவில்லை’ என்று தெரிவித்தார். ‘ராக்கைன் மகாணத்தில் 2017ம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, மியான்மர் இராணுவம் அளவுக்கதிகமான பலப்பிரயோகத்தில் ஈடுபட்டது உண்மைதான்.
எனினும், அதனை வைத்து இராணுவம் இன அழிப்பில் ஈடுபட்டடாகக் கூற முடியாது. இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள கம்பியா நாடு, ராக்கைன் மாகாண நிலவரம் குறித்து உண்மைக்கு மாறான தோற்றத்தை உருவாக்கக் கூடிய, முழுமையற்ற விவாதங்களை நீதிமன்றத்தின் முன்வைத்துள்ளது வருத்தமளிக்கிறது.’
‘நூற்றுக்கணக்கான ரோஹிங்கயா பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காகவே, ராக்கைன் மாகாணத்தில் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது அவர்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதையோ, பொதுமக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் காட்டாமல் நடந்துகொண்டதையோ மறுக்க முடியாது.
ஆனால், அவை இன அழிப்பு நோக்கத்தைக் கொண்டு செய்யப்பட்டவை என்று கூறுவது வெறும் கட்டுக்கதையாகும்’என்றார் ஆங் சான் சூகி.
அத்துடன்,‘மியான்மருக்கு எதிரான இந்த வழக்கு தமது நாட்டின் நல்லிணக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும்’ என்றும் எச்சரித்தார்..
இதேவேளை, மியன்மார் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர்களும் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்களை மறுத்து தமது வாதங்களை முன்வைத்தனர்.
ஆனால்,ஒரு காலத்தில் தனது தந்தையைப் படுகொலை செய்து, தன்னையும் வீட்டுச்சிறையில் வைத்துக் கொடுமைப்படுத்திய தனது நாட்டின் அரசையும் இராணுவத்தையும் பாதுகாக்க இந்த வழக்கில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி முன்னிலையானது, சர்வதேச சமுதாயத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஆங் சான் சூகியின் கருத்திற்கு ரோஹிங்கயா அகதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் முகமது முஹைபுலா கூறியபோது, ‘மியான்மரில் ரோஹிங்கயாக்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று சர்வதேச நீதிமன்றத்திடம் ஆங் சான் சூகி பொய் கூறியிருக்கிறார்.
அவர் கூறியது உண்மையா, இல்லையா என்பதை உலகம் முடிவு செய்யும். எந்தவொரு திருடனும், தான் திருடியதை ஒப்புக்கொள்ள மாட்டான். அதுபோலத்தான் இனப்படுகொலை குற்றச்சாட்டையும் ஆங் சான் சூகி மறுக்கிறார்.
ஆனால், நாங்கள் அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் எங்களுக்கு நீதி கிடைக்கும். இனப்படுகொலை நடைபெற்றதற்கான ஆதாரங்களை நாங்கள் உலகின் முன் சமர்ப்பித்துள்ளோம்’ என்றார் அவர்.
இதேவேளை, மியன்மார் அரசு நடத்திய வெறியாட்டத்துக்கு உலக சமுதாயத்திடமிருந்து இந்த விசாரணையின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்த இனப்படுகொலையில் இருந்து உயிர்தப்பியவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது மற்றும் இறுதி நாள் விசாரணையில் பேசிய மேற்கு ஆபிரிக்க நாட்டின் முன்னணி வழக்கறிஞர், வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் வரை மியன்மார் இராணுவத்தை கட்டுப்படுத்த ஐ.நாவினால் தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
சேர்பியா – பொஸ்னியாவில் ஐ.நா. நடைமுறைப்படுத்திய துரித நடவடிக்கையை அவர் இங்கு உதாரணம் காட்டினார். மியன்மார் அரசு ஒரு சில படையினரை குற்றவாளிகளாக்கி தாங்கள் தப்பிக்கப் பார்க்கின்றது.
ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு ஒரு சில படையினரை பொறுப்பேற்று, தப்பிக்கமுடியாது. இதற்கான பொறுப்பை அரசு ஏற்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
மியன்மாரின் அரசாங்கம் இனப்படுகொலைக் குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான காலம் முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகும். ஆனால் ஹேக்கை தளமாகக் கொண்ட ஐ.நா. அமைப்பான சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக நிச்சயமாக இருக்கும்.
ரோஹிங்கியா இனக்குழுவைப் பாதுகாக்க பூர்வாங்க பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கலாமா? என்பதை சர்வதேச நீதிமன்றம் விரைவில் தீர்மானிக்கும்.
தற்காலிக நடவடிக்கைகள் குறித்த முடிவுக்கு நீதிமன்றம் ஒரு திகதியை நிர்ணயிக்கவில்லை, ஆனால் எதிர்
வரும் ஜனவரி மாதம் ஒன்று வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச நீதிமன்றம் எடுக்கும் முடிவுகள் மேல்முறையீட்டிற்கு உட்பட்டவை அல்ல. முன்னைய பல்வேறு வழக்குகளில் சர்வதேச நீதிமன்ற முடிவுகளை குற்றம்சாட்டப்பட்ட நாடுகள் புறக்கணித்துள்ளன அல்லது முழுமையாக பின்பற்றத் தவறிவிட்டன என்ற வரலாறுகளும் உள்ளன.
ஆனாலும் இந்த வழக்கின் ஊடாக மியன்மார் அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியாகிவிட்டது. இதற்கான தீர்வைப்பெற ரோஹிங்கியாக்கள் பல ஆண்டுகள் காத்திருக்கவும் கூடும். இருந்தபோதும், ரோஹிங்கியா மீதான இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டை மியன்மார் மீது சுமத்துவதற்கான அடித்தளம் ஒன்று இப்போது போடப்பட்டுவிட்டது.
இவ்வாறான ஒரு அடித்தளத்தை தமிழ் மக்கள் எப்போது போடப்போகின்றார்கள்? தங்கள் மதத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக கம்பியா, மியன்மார் முஸ்லீம்களுக்கு தனது ஆதரவுக்கரத்தை வலுவாகக் கொடுத்துள்ளது.
தமிழ் இனத்திற்காக எந்த நாடு தங்கள் ஆதரவுக்கரத்தை நீட்டி சிங்களப் பேரினவாத அரசை சர்வதேச நீதிமன்றுக்கு இழுத்துவரப்போகின்றது? இதற்காக தமிழ் மக்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதே இப்போது தமிழ் மக்கள் முன் எழும் கேள்வியாக உள்ளது.
வெற்றிநிலவன்-