அமெரிக்கா போரை அறிவித்துள்ளது, அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், இராக் அதிகாரிகளின் கார்களை நோக்கி நள்ளிரவில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில், ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமாணி மற்றும் ஈராக்கின் ஹஷீத் அல்-ஷாபி ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமிய குடியரசின் குட்ஸ் படை மற்றும் ஈரான் தளபதி காசிம் சுலைமாணி, பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க படையால் ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமினி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
இத்தனை ஆண்டுகளாக காசிம் சுலைமாணி மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளுக்கான வெகுமதியாகத்தான் அவர் உயிர் பலியிடப்பட்டுள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.
கடவுள் விருப்பத்தில் அவர் அழைக்கப்பட்டிருந்தாலும், அவருடைய குறிக்கோள் மீதான பணிகள் எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது. காசிம் சுலைமாணி படுகொலைக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தக்க பதிலடி காத்திருக்கிறது என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கப் படைகளால் ஹெலிகாப்டர்கள் மூலம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத் தாக்குதலில் காசிம் சுலைமாணி கொல்லப்பட்டார். இது முட்டாள்தனமான, மிகவும் ஆபத்து நிறைந்த ஒரு செயலாகும். இதற்கு அமெரிக்கா முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸாரீஃப் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இஸ்லாமிய குடியரசின் குட்ஸ் படை – புரட்சிகர படை அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ அதிகாரிகளின் கூட்டமும் நடைபெறவுள்ளது.
உயர்மட்ட ராணுவ அதிகாரிகளான ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமாணி மற்றும் ஈராக்கின் ஹஷீத் அல்-ஷாபி ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரை படுகொலை செய்வதன் மூலம், ஈரான் மற்றும் இராக் ஆகிய 2 நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் போரை அறிவித்துள்ளார்.
எனவே இந்நாடுகளில் வசிக்கும் அனைத்து அமெரிக்க குடிமக்களும் உடனடியாக இப்பகுதியை விட்டு வெளியேறுவது சிறந்தது என தெஹ்ரானை மையமாகக் கொண்ட முகமது மராண்டி தெரிவித்துள்ளார்.
சீனா கோரிக்கை
ஈரான் – ஈராக் – அமெரிக்கா ஆகிய அனைத்து தரப்பும் நிதானத்தை கடைபிடிக்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூங் கூறியதாவது:-
“ சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் குறிப்பாக அமெரிக்கா, பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்க நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்” என்றார்.
இராக்கில் மகிழ்ச்சி நடனம்
தளபதி காசிம் சோலிமானி அமெரிக்கா சென்ற பின்னர் ஈராக்கியர்கள் “தெருவில் நடனமாடுவதை கண்டதாக ஒரு வீடியோவை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வியாழக்கிழமை ட்விட்டரில் வெளியிட்டார்.
ஈராக்கியர்கள் – சுதந்திரத்திற்காக தெருவில் நடனமாடுகிறார்கள்; ஜெனரல் சோலிமணி இனி இல்லை என்பதற்கு நன்றி” என்று பாம்பியோ கூறி உள்ளார். ஒரு சாலையில் ஓடும் ஏராளமான மக்கள் ஈராக்கிய கொடிகள் மற்றும் பதாகைகளை அசைக்கும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வீடியோவிற்கான ஆதாரத்தை வழங்கவில்லை. மேலும் விடியோ பற்றி எந்த விவரங்களையும் வழங்கவில்லை.