அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் குவாசிம் சோலெய்மானியின் இறுதி ஊர்வலம் இன்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்றது. ஈராக் பிரதமர் அடெல் அப்தெல் மஹ்தி உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் கறுப்பு உடையணிந்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஈரானின் குத் ராணுவ படையின் தலைமை தளபதியான ஜெனரல் குவாசிம் சோலெய்மணி, ஈராக் துணை ராணுவ படையின் தலைமை தளபதி அபு மஹ்தி அல் முஹாந்திஸ் மற்றும் 8 ராணுவ தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சோலெய்மணி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழிவாங்குவோம் என ஈரான் அறிவித்துள்ளது. இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.
அதேசமயம் பாக்தாத் விமானநிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு போரை துவக்க நடந்த தாக்குதல் அல்ல, போருக்கு முடிவு கட்டுவதற்காக நடந்த தாக்குதல் என அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஈரான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் குவாசிம் சோலெய்மணி மற்றும் அபு மஹ்தி அல் முஹாந்திஸின் இறுதி ஊர்வலம் இன்று மதியம் பாக்தாத் நகரில் நடைபெற்றது.
இறுதி ஊர்வலத்தில் ஈரான் பிரதமர் அடெல் அப்தெல் மஹ்தி, ஷியா மதகுரு அமர் அல் ஹகிம், முன்னாள் பிரதமர் நூரி அல் – மாலிகி மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஈராக் நாட்டின் தேசிய கொடிகளையும் சோலெய்மணிக்கு விசுவாசமான ஈரான் ஆதரவு படைகளின் கொடிகளையும் ஏந்தியப்படி சென்றனர். சிலர் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
அவர்களது உடல் பாக்தாத்தின் காதிமியா மாவட்டத்தில் உள்ள ஷியா தர்காவில் இருந்து தெற்கே ஆசு அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் உள்ள கிரீன் ஜோனுக்கு (Green Zone) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இருவரின் உடல்களுக்கும் கிரீன் ஜோனில் அதிகாரப்பூர்வ இறுதி மரியாதை செலுத்தப்படும். பின்னர் ஜெனரல் சோலெய்மணியின் உடல் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் குத் படையின் தலைமை தளபதியான சோலெய்மணி பி்ராந்திய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தவர். ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்திற்காக ஈராக், சிரியா மற்றும் லெபனானில் ஈரான் ஆதரவு படைகளை நிலை நிறுத்த வியூகம் அமைத்தவர்.
அமெரிக்க படைகள் மீது அமெரிக்க ஆதரவு படைகள் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதலுக்கு சோலெய்மணி தான் காரணம் என கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது தாக்குதல்
அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சோலெய்மணி கொல்லப்பட்ட நிலையில் இன்று அமெரிக்க படைகள் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானுடன் நெருங்கிய தொடர்புள்ள ஈராக் துணை ராணுவ அமைப்பான ஹஷாத் அல் – ஷாபி வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. .
ஈரான் ராணுவ தளபதி சோலெய்மணியின் இறுதி ஊர்வலம் துவங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர். எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் வெளியாகவில்லை.
ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வான்வழி தாக்குதல் நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் தெரிவித்துள்ளன.