டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, அதிக ஆசனங்களைப் பெற்று ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியமைக்கின்றது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆத்மி கட்சி 58 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்த வெற்றியை அக்கட்சியினர் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் நலனுக்காக கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய அபிலாஷைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவு என்று கூறிய மம்தா, மோடி அரசின் குடியுரிமைக் கொள்கைகள் நிராகரிக்கப்படும் என்றும் வளர்ச்சி மட்டுமே கைகொடுக்கும் என்றும் தெரிவித்தார்.