அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காஷ்மீர் விவகாரம், மதச் சுதந்திரம் உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ட்ரம்ப் மதச்சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களில் பேச்சுவார்த்தை நடத்துவார் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து சிவசேனாவின் உத்தியோகப்பூர்வ பத்திரிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் ஷாகின் பாக் போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகிய போராட்டங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகள். இதை இந்திய அரசு கவனித்துக்கொள்ளும்.
வர்த்தக சுற்றுலா என்ற அடிப்படையிலேயே அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். அவரின் பயணம் நிச்சயம் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஊக்கம் அளிக்கும்.
அதிபர் ட்ரம்ப்பின் இந்த 36 மணிநேர நீண்ட பயணம் நிச்சயம் இந்தியாவின் நிதிச் சிக்கலைத் தீர்க்க உதவாதது. வேலையின்மையைத் தீர்க்கவும் உதவாது. அவர் வந்து சென்ற பின் அவரின் அனைத்துத் தடயங்களும் அழிக்கப்படும்.
அகமதாபாத்தில் சாலைகள் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. ஏழ்மையை வெளிக்காட்டும் குடிசைப்பகுதிகள் சுவர் வைத்து மறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் பயணத்தைக் காட்டிலும் இதுபோன்ற விடயங்கள்தான் அதிகம் கவர்ந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.