இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு சென்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் டிரம்ப், இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ், வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர்.
வாஷிங்டன் நகரில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் நேற்று புறப்பட்ட டிரம்ப், இன்று நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். பிரதமர் மோடி, விமான நிலையத்துக்கு நேரில் வந்து டிரம்ப் தம்பதியருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.
டிரம்பு விமானத்தில் இருந்து வெளியே வந்து, விமான நிலையத்திற்குள் செல்லும்போது சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. படை வீரர்கள் அணிவகுத்து நின்று வரவேற்றனர். பல்வேறு கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி டிரம்பை வரவேற்றனர்.
டிரம்ப் வருகைக்காக அகமதாபாத் நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வரவேற்பு தட்டிகள், சுவரோவியங்கள், அலங்கார வளைவுகள் காணப்படுகின்றன.
விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், மகாத்மா காந்தியின் வாழ்விலும், சுதந்திர போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்த சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 22 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து டிரம்புக்கு ஆரவார வரவேற்பு அளிக்கிறார்கள். வழியில் 30-க்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இந்தியாவின் கலாசாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றை டிரம்ப் தம்பதியர் கண்டு ரசிக்க உள்ளனர்.