இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக கனடா நாடாளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக, கென்சர்வேற்றிவ் உறுப்பினர் கார்னெற் ஜீனஸ் (Garnett Genuis) சபையில் கேள்வியொன்றை முன்வைத்தார்.
“இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பொதுச் சபையானது ஏகமனதாகத் தீர்மானித்தது.
ஆகவே நான் பிரதமரைக் கேட்க விரும்புகிறேன், குறித்த சர்வதேச விசாரணை தொடர்பாக இதுவரை ஏதாவது முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதா? அமெரிக்காவினால் இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள தடையில் கனடாவும் பங்கெடுக்குமா? என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, “நாங்கள் மனித உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றோம். அது இலங்கையாகவோ அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் வலியுறுத்துவோம்.
அதற்காகவே கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையினை கனடா கொண்டு வந்து, மனித உரிமைகள் தொடர்பான கடமைக்கு இணங்கியது.
நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகளை கடுமையாக எதிர்க்கிறோம். இது இறையாண்மையின் அழிவுக்கு உதவுகிறது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நாங்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.