அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரான்ஸில் மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஒயிஸ் மாவட்டத்தில் உள்ள கிரெயில் மருத்துவமனையில் பணிபுரியும் 100 மருத்துவ அதிகாரிகளும், கொம்பேய்ன் மருத்துவமனையில் பணி புரியும் 100 அதிகாரிகளும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததால் முன்னெச்சரிக்கை காரணமாக இவர்கள் தங்களது வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை கிரெயில் மருத்துவமனை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது. மீண்டும் மார்ச் 11ஆம் திகதி மருத்துவமனை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கொரோனா தாக்கம் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற 2000 மாணவர்கள் வரை பாடசாலைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு அவர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என தேசிய கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர் அறிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் சீனா மற்றும் இத்தாலிக்கு பயணமாகியிருந்த பரிஸ்சை சேர்ந்த 51 நகராட்சி அதிகாரிகளில் வீடுகளில் தங்கியிருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.