ஆக்ரா நகரில் புதிதாக 6 பேர் கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் பிற அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று விரிவாக ஆலோசனை நடத்தினார்.
கோவிட்-19 வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கேட்டறிந்தார்.
சுகாதாரம் மற்றும் பிற அமைச்சக உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தியது குறித்தும். கரோனா வைரஸ், கோவிட் 19 வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் செய்தி ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகம் ஆக்ரா நகரில் 6 பேர் கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 6 நோயாளிகளும் தனி வார்டு ஒன்றில் வைத்து சிகிச்சை அளிக்கப் படுகிறார்கள். அந்த 6 பேருடைய குடும்ப உறுப்பினர்களும் நோய் அறிகுறிகள் தெரியவந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரும்படி பணிக்கப்பட்டு உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இந்த 6 நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களுடைய ரத்த மாதிரிகள் தேசிய வைரஸ் நிறுவனத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
கோவிட் 19 வைரஸ் கிருமிகளால் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நிதிச்சந்தைகளில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து வருகிறது. வைரஸ் தொற்று காரணமாக பங்குச் சந்தை, நிதி மார்க்கெட்டுகள் பாதிக்கப்படாமல் அவை முறையாக இயங்குவதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. இன்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்பொழுது உலக அளவில் பாதுகாப்பான நாடுகள் என்று கருதப்படும் நாடுகளுக்கு முதலீடுகள் மாற்றப்படுகின்றன. அதனால் உலகப் பங்குச் சந்தைகளில் கொந்தளிப்பான நிலை உள்ளது. அத்தகைய பாதிப்புக்கள் இந்தியாவையும் தொட்டு விடக்கூடாது என்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டினருக்கு தடை
இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த 4 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மூலமாக கோவிட்-19 வைரஸ் கிருமிகள் இந்தியாவுக்குள் வந்து வந்துவிடக்கூடாது என்பது என்பதில் அரசு விழிப்புடன் இருக்கிறது.
இந்த விழிப்புணர்ச்சி அடிப்படையில்தான் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி வரை வழங்கப்பட்ட விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டு இந்தியாவுக்கு வெளிநாட்டவர் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
பயணம் போகவும் வரவும் தடை
இந்தியர்கள் யாரும் கோவிட் 19 வைரஸ் பாதிப்பு உள்ள இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவிட் 19 வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.