தென்கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவைத் தொடர்ந்து இந்தக் கொரோனா வைரஸ் தென்கொரியா மற்றும் ஈரானில் வேகமுடன் பரவி வருகின்றது. வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் தென் கொரியாவில் மேலும் புதிதாக 516 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 981 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 270 ஆக உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து வந்த தங்கள் நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அர்ஜெண்டினா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அர்ஜெண்டினா அரசாங்கம் தெரிவித்துள்ளது.