கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் உலகம் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவும், மோசமாகவும் பரவி வருவதால், உலக நாடுகள் எங்கும் ஒரு அச்சமான நிலை தோன்றியுள்ளது.
உலகம் எங்கும் 3522 மக்கள் இதுவரை பலியாகியுள்ளதுடன், 103,738 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள போதும், தற்போது அது உலகம் எங்கும் உள்ள 100 இற்கு மேற்பட்ட நாடுகளில் மோசமாக பரவி வருகின்றது.
தென்கொரியா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 45 பேர் பலியாகியுள்ளதுடன், 7000இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 500 பேர் புதிதாக தொற்றுதலுக்கு உள்ளாகி வருகின்றனர். 28500 அமெரிக்கப் படையினர் தங்கியுள்ள தென்கொரியாவின் படைத் தளங்களிலும் நோய் பரவியுள்ளது. படைத்தளங்களில் பணியாற்றும் இருவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவின் நான்காவது பெரும் பொருளாதார நாடான தென்கொரியாவின் பாதிப்பும், யப்பானின் பாதிப்பும் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. யப்பானில் கடந்த வியாழக்கிழமை வரையில் 1000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த வருடம் ஜுலை மாதம் இடம்பெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இடம்பெறும் என யப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் சிகோ கசிமோட்டோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தென்கொரியாவுக்கு அடுத்த நிலையில் ஈரானில் மிக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 120 பேர் அங்கு மரணமடைந்துள்ளதுடன், 3500 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் 20ஆம் நாள் வரையில் மூடப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் தற்போது மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.
இவற்றில் இத்தாலியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரையில் 233 பேர் பலியாகியுள்ளதுடன், ஏறத்தாள 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலையே ஐரோப்பிய நாடுகளை அதிகம் பாதித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலியே உள்ளது.அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அரசு 8.4 பில்லியன் டொலர்களை அவசரகால நிதியாக ஒதுக்கியுள்ளது.
அதேசமயம், பிரித்தானியாவில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளதுடன், 206 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவும் அவசரகால நிதியாக 8.3 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இதனிடையே, கோவிட்-19 வைரஸ் உலகின் பொருளாதாரத்தை அதிகம் பாதித்து வருவதால், உலகம் மிகப்பெரும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் செல்லும் ஆபத்துக்கள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருமளவான மக்கள் தமது விடுமுறை பயணங்கள் மற்றும் சுற்றுலாப் பயணங்களை இரத்துச் செய்து வருவதால், கடந்த வாரம் ஐரோப்பாவில் ஆயிரக் கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜேர்மனியை தளமாகக் கொண்ட லுப்தான்சா என்ற விமான நிறுவனம் மார்ச் மாதம் ஐந்தாம் நாள் வரையிலும் 7100 விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.
ஏனைய விமான சேவை நிறுவனங்களும் தமது சேவைகளை 25 விகிதமாக குறைத்துள்ளன. விமான சேவை நிறுவனங்களின் இழப்பு 113 பில்லியன் டொலர்கள் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், இது பல மடங்கு அதிகரிக்கலாம் என அனைத்துலக வான் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னர் இந்த தொகை 29 பில்லியன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பிரித்தானியாவின் பிளைபீ என்ற விமான சேவை நிறுவனம் முற்றாக முடங்கியதால் அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதுடன், 2000 பேர் வேலையிழந்துள்ளனர்.பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் இல் 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் இறந்துள்ளனர். ஜேர்மனியில் 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தாகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஆபிரிக்க நாடுகளில் குறைவாக காணப்பட்ட இந்த நோய், தற்போது அங்கும் பரவ ஆரம்பித்துள்ளது. தென்ஆபிரிக்காவில் முதல் நபர் கடந்த வியாழக்கிழமை தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இது தமது நாட்டின் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என தென்ஆபிரிக்காவின் அரச தலைவர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் இதுவரையில் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிலும் நோய் அதிகம் பரவி வருவதால் ஜேசுநாதர் அவதரித்த பெத்தலகாம் தேவாலயம் மூடப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்திலும் மசூதிகளும் மூடப்பட்டுள்ளதுடன், பல இஸ்லாமிய நாடுகளில் தொழுகைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், பல்வேறு தகவல்கள் சமூகவலைத் தளங்களில் பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருவதாக அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்பட்ட வைரஸ் கிருமியே உலகில் பரவ விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்துக்களை இரண்டு மில்லியன் பேர் ருவிட்டரில் பகிர்ந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.இதனிடையே, உலகம் எங்கும் உள்ள பல நாடுகள் தமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடியுள்ளதால் 290 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
வைரசின் தாக்கம் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரலீனா யோர்ஜீவா தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஒத்த நெருக்கடியை உலகம் எதிர் நோக்குவதாகவும், வறிய நாடுகளுக்கு உதவியாக 50 பில்லியன் டொலர்களை தாம் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, சுற்றுலாத்துறை கப்பல் நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், களியாட்ட விடுதிகள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் என்பன கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பங்குச் சந்தையும் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை (6) அது 61 பில்லியன் பவுண்களை இழந்துள்ளது. உலக மக்களின் வேலை வாய்ப்புக்களில் சுற்றுலாத்துறை 319 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிவருகின்றது. உலகப் பொருளாதாரம் 347 பில்லியன் டொலர்கள் இழப்பை சந்திக்கலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
யப்பானின் அஞ்ஜெஸ் மருந்து உற்பத்தி நிறுவனம் ஒசாக்கா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிட்-19 வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.