கொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்துள்ளது. இன்னும் இலட்சக் கணக்கானோர் வைரஸால் இலக்குவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளைமாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளார்களைச் சந்தித்த ட்ரம்ப், மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், “இந்த வைரஸ் தொடர்பான விபரங்களை சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிவித்திருந்தால் வைரஸ் பரவிய பகுதியிலேயே அதனைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். கொரோனா வைரஸ் குறித்த விவரத்தை சீனா தெரிவிக்காததால் தற்போது உலகமே அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
கொரோனா குறித்த தொடக்க நிலை அறிக்கைகளை சீனா மறைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர்கள் (சீனா) வெளியிடும் விபரங்கள் உண்மையாக இருக்கும் என நம்புவோம்.
இந்த வைரஸ் குறித்து மக்களுக்கு தெரியவந்திருந்தால் முன்னதாகவே தடுக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு வைரஸ் தொடர்பான தகவல் கிடைத்திருந்தால் சீனாவின் எப்பகுதியில் வந்ததோ அங்கேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது இந்தக் கொடிய வைரசால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான நிலையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.