கொரோனா வைரஸ் வெடிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக லண்டன் முழுவதும் உள்ள பப்கள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் முதலான அனைத்தையும் மூடுவதற்கு உத்தரவிடப்படவுள்ளது.
இன்று பிற்பகல் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்தக் கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளார்.
இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தலைநகர் லண்டன் Covid-19 வெடிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொற்றுநோய் பரவும் வீதமும் அதிகமாகியுள்ளது.
உத்தியோகபூர்வ விஞ்ஞான ஆலோசனையின்படி, தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அதிகமாவதை நிறுத்த மக்களுக்கிடையிலான இடைவெளிகள் பெருமளவில் அதிகரிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் ஜோன்சன் 12 வாரங்களில் இந்த தீவிரத் தாக்கம் குறைந்து விடும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார். ஆனால் இன்று விஞ்ஞானிகள் சமூகங்களுக்கிடையிலான இடைவெளிகள் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்று கணித்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது 144 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 58 பேர் லண்டனைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அவசர கோப்ரா கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் உணவகங்களை மூடுவது குறித்து முடிவு செய்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் பொருட்களைக் கையாளுவதையும் அதனால் வைரஸ் பரவுவதையும் நிறுத்த அத்தியாவசியமற்ற கடைகளாகக் கருதப்படும் கடைகள் மூடப்படலாம் என்று குறிப்பிட்டார்.