தமிழ் மக்கள் உளரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 21 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தமிழர்களின் விடுதலைக்காக, உரிமைக்காக தனது உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்கின்ற ஒரு புனிதமான காலமாகும்.
குறித்த காலப்பகுதியில், ஜனநாயக உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி, காவல்துறையினரையும் புலனாய்வுப் பிரிவினரையும், இராணுவத்தினரையும் பயன்படுத்தி, சிறிலங்கா அரசாங்கம் மிகவும் மோசமான அடக்குமுறையின் ஊடாக, தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை மறுத்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தல் முக்கியமானது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களை உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்துகின்ற செயற்பாடுகள், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலோ, தற்போதைய அரசாங்கத்திலோ, உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், மனதளவில் வேதனையுடன் இருப்பார்கள். அவர்களது உறவுகளை நினைவு கூருவது அவர்களது மனதை ஓரளவேனும் ஆறுதல்படுத்தும்.
மருத்துவ அடிப்படையில் யோசித்தேனும், நினைவேந்தலுக்கு அனுமதித்திருக்க வேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.