மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரங்களின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை தொடக்கம் நேற்று காலை வரை நீடித்த வன்முறைச் சம்பவங்களின் போது, மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 71 கைதிகளும், 2 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்தனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த வன்முறைகளில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்து, றாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து. உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்த கைதிகளுக்கு றாகம மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இவர்களில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, மஹர சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 186 கைதிகள் கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும், தனியான இடம் ஒன்றில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவத்தாகவும் காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
அதேவேளை மேலும் 78 கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டு, அட்டாளைச்சேனை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.