வவுனியா- கல்மடு, ஈஸ்வரிபுரம் கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவருக்கும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனையில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் குறித்த இளைஞன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கல்மடுவில் உள்ள வீட்டிற்கு சென்ற போது, மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று இரவு அவர் கிளிநொச்சி தொற்று நோயியல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை கிளிநொச்சியிலும் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், தாயின் மரணச் சடங்கிற்காக கொழும்பிலிருந்து திருவையாறுக்கு வந்திருந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவரது கணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 நாட்களுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இவருக்கு தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மரணச் வீட்டுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மேலும் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.