தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுக்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியமையும், இலட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றமையும் போர் குற்றமாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இறுதி போரில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை இதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவை எதுவுமே இறுதி யுத்தத்தில் இடம்பெறவில்லை என்றால் சிறிலங்கா அரசாங்கம் தைரியமாக சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறிலங்கா அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இறுதி போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினேன் என்று அவர் குறிப்பிட்டார்.
நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை சந்தித்தேன். விடுதலைப்புலிகள் கட்டுப்பட்டு பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர் என்றும் அவர் கூறினார்.
அவர்களை வெளியேற்றி அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நான் பத்து தடைவைகளும் அதிகமாக இது குறித்து பேசினேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களை கடல் மார்க்கமாக கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.