புரவி புயலினால் வடக்கு மாகாணத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும், சிறிலங்கா அரசாங்கம் சேத விபரங்களை உரிய முறையில் வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்றுமுன்தினம் திருகோணமலை ஊடாக நகர்ந்து, மன்னார் வழியாக வெளியேறிய புரவி புயலினால், வடக்கில் மிகப் பலத்த மழைகொட்டியதுடன் சூறை க்காற்றும் வீசியது.
இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மற்றும் திருகொணமலை மாவட்டங்களிலும் பல ஆயிரக்கணக்கானோர் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை சிறிலங்கா அரசாங்கம் மறைத்து வருகிறது.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச, புயலினால் பெரும் சேதங்கள் ஏற்படவில்லை என்றும், வடக்கில் 1009 குடும்பங்களும், திருகோணமலையில் 551 குடும்பங்களும் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.