நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் செலவுக்கட்டளை 207க்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வாக்கெடுப்பு கோரிய நிலையில் அதற்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனடிப்படையில் மேலதிக 132 வாக்குகளால் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இன்று, அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
காலை 9.30 மணி முதல் இடம்பெற்ற விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் விவாதத்தில் உரையாற்றும் போது ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இறுதியில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான சபையின் ஆதரவை சபாநாயகர் கோரியபோது அமைச்சின் செலவுக்கட்டளை 207க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வாக்கெடுப்பு கோரினார்.
அதனைத்தொடர்ந்து சபாநாயகர் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.
வாக்கெடுப்பு சபையில் இலத்திரணியல் அடிப்படையில் இடம்பெறாமல் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஆசன வரிசையின் அடிப்படையில் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து செலவு கட்டளைக்கு எதிராக வாக்களிக்க எழுந்திருக்குமாறு வரிசை பிரகாரம் சபாநாயகர் அழைத்தபோது ஆளும் தரப்பில் யாரும் இருக்கவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்களும் கூட்டமைப்பின் ரெலோ உறுப்பினர்கள் மூவருமாக ஐவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.