கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் ஒன்ராறியோவில் வாழும் குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய கல்விக்கான மேலதிக செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் ஒன்ராறியோ அரசாங்கம் 380 மில்லின் டொலர்கள் நிதியை வழங்கியுள்ளது.
இந்த தகவலை ஸ்காபரோ – றூஜ் பார்க் மா நில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்..
இன்று முதல் ஒன்ராறியோவில் வசிக்கும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு உதவி வழங்கவென ஏற்படுத்தப்பட்டுள்ள இணையத்தளத்தினூடாக தமது விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி 15 வரையும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதோடு இந்த திட்ட த்திற்கு பாடசாலைக்குச் சென்று கல்விபயிலும் பிள்ளைகள் அல்லது மெய்நிகர் இணைய வகுப்புகளினூடாக கல்வி பயிலும் பிள்ளைகள் அல்லது இரண்டும் இணைந்த முறையில் கல்வி பயிலும் பிள்ளைகள் பொருத்தமானவர்களாக இருப்பர் என்றும் கூறியுள்ளார்.
இந்நிதி கொரோனா காலத்தில் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் தொழில்நுட்ப மற்றும் கல்வி மேம்பாட்டு வளங்கள் போன்றவற்றுக்கென ஏற்படும் மேலதிக செலவுகளைச் சமாளிப்பதற்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.
இந்த முயற்சியானது இக்கட்டான காலகட்டத்துக்கான ஒன்ராறியோவின் வரவுசெலவுத் திட்ட செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.