சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்தே இலங்கையர்கள் கரிசனை கொள்ள வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“துறைமுகங்களில் சீனா மிக அதிகளவில் முதலீடு செய்கிறது.
நாங்கள் இன்னொரு பாகிஸ்தான் ஆகப் போகிறோமா? இன்னொரு லாவோஸ் ஆகப் போகிறோமா?
நாங்கள் ஒரு கடன் பொறிக்குள் சிக்கியுள்ளோம். இது தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ மட்டுமான பிரச்சினை அல்ல.
சீனா குறித்து சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சீனா இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. சீன முதலீடுகள் வரும் போது, சீனர்களே வந்து பணியாற்றுகிறார்கள்.
அவர்கள் முதலீடு செய்து, தமது பணத்தை தாமே எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள்.துறைமுக நகரத்தை அவர்கள் அமைப்பது சிறிலங்காவின் மீது கொண்ட காதலினால் அல்ல. பிராந்தியத்தில் அவர்களுக்கு ஒரு தளம் தேவைப்படுகிறது. நாங்கள் சீன குடியேற்ற நாடாக மாறுவதை விரும்பவில்லை. சீனா குறித்துக் கவலைப்படுங்கள், எங்களைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.