சிங்களவர்களுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்ய வேண்டும் என்று, சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சமஸ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேறு நாட்டுடன் பேச்சு நடத்துவது, அவர்கள் மேற்கொண்ட சத்தியபிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது.
ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட போது நாஸி அரசியல் கட்சி முற்றாக அழிக்கப்பட்டது.
கம்போடியாவில், பொல்பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவரது கெமரூஜ் கட்சி காணாமல் போய்விட்டது.
சதாம் ஹூசைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத் கட்சி அழிக்கப்பட்டது.
ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து, அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது. மகிந்த ராஜபக்ச அவ்வாறு செய்யாதது அவரது தவறு. அவர் அவர்களை மன்னித்தார்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது. சிங்களவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்ய வேண்டும்” என்றும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.