சிறிலங்காவில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 97தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசதரப்பில் உள்ள சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நீதி அமைச்சரை சந்தித்தனர்.
நாடாளுமன்றில் நடந்த இந்த சந்திப்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் மனு ஒன்று நீதி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் மகசின் சிறைச்சாலையில் 36 தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகள் நிறைவடையாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தச் சிறையில் தண்டனை வழங்கப்பட்ட 9 கைதிகளும் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் 9 கைதிகளுமாக 54 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் 13 தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகள் நிறைவடையாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தச் சிறையில் தண்டனை வழங்கப்பட்ட 19 கைதிகளும் உள்ளனர். அங்கு 32 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் மகர சிறைச்சாலையில் தலா 2 பேரும் மொனராகலை, களுத்துறை, தும்பரை மற்றும் நீர்கொழு்பில் தலா ஒருவருவரும் என மொத்தம் 97 தமிழ் அரசில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 தண்டனைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் ஊடாகவே விடுதலை செய்ய முடியும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.