புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு பரிந்துரை செய்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவு வரைவானது அடுத்தவாரத்தில் இறுதி செய்யப்படவுள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்படவுள்ள வரைவுக்கான தயார்ப்படுத்தல்கள் சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக , அத்துடன் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை உட்பட கடந்த காலத்தில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் முன்னெடுக்கட்ட செயற்பாடுகளின் போது உருவாக்கப்பட்ட முன்மொழிவுகள், உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்மொழிவு வரைவானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்தாராய்ந்து இறுதி செய்யப்பட்டதன் பின்னர் அவர்களின் ஒப்புதல்களுடனேயே அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.