இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மாவட்ட நீதிமன்றம் குறற்றவாளியாக அறிவித்திருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,
அவரது சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, வியன்னான பிரகடனங்களின் கீழ், பிரிகேடியர் பிரியங்கவுக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாகவும், சர்வதேச உடன்பாடுகளுக்கு அமைய அவரைத் தண்டிக்க முடியாது என்றும் வாதிட்டார்.
அதேவேளை, மனுதாரர் தரப்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, இராஜதந்திர விலக்குரிமை என்பது, தண்டனையில் இருந்து தப்பித்தல் அல்ல என்றும், இராஜதந்திரி என்ற பாத்திரத்தை, கவசமாக பயன்படுத்திக் கொண்டு, எல்லா செயல்களையும் செய்ய முடியாது என்றும் வாதிட்டுள்ளார்.
இருதரப்பு வாதங்களை அடுத்து நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.