புரவி புயல் மற்றும் அதனை அடுத்து பெய்த கடும் மழையினால் வடக்கில் 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 99 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்றும், 3 ஆயிரத்து 496 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் கூறுகின்றன.
மேலும் 786 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இந்த புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்புகளின்படி, 79 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில், 4 ஆயிரத்து 981 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 561 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில், 9 ஆயிரத்து 373 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில், 9 ஆயிரத்து 787 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில், 8708 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில், 15 வீடுகள் முற்றாக அழிந்து போயிருப்பதுடன், 1322 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில், 61 வீடுகள் முற்றாகவும், 218 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மன்னார் மாவட்டத்தில், 2 ஆயிரத்து 227 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.