உள்ளூராட்சி சபைகளில் உள்ள வளங்களை சபைகள் பயன்படுத்துவதோடு, மத்திய அரசு நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமாகிய இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளில் குறிப்பாக, கோறளைப்பற்று வடக்கு வாகரை, மண்முனைமேற்கு வவுணதீவு, மண்முனை தென்மேற்கு கொக்கட்டிச்சோலை, போரதீவுப்பற்று வெல்லாவெளி பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு வருமானம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.
கோறளைப்பற்று வாழைச்சேனை, ஏறாவூர்பற்று செங்கலடி, மண்முனைப் பற்று ஆரையம்பதி, மன்முனை தென் எருவில் பற்று களுதாவளை போன்ற உள்ளூராட்சி சபைகள் வருடாந்த வழமையான நிருவாகத்துக்குட்பட்ட வேலைகளைச் செய்வதற்கு ஓரளவுக்கு நிதி போதுமானது.
ஆனால் வருமானம் குறைந்த உள்ளூராட்சி சபைகளின் வருமானத்தை வைத்துக் கொண்டு பல வேலைத் திட்டங்களைச் செய்ய முடியாது. குறிப்பாக வரட்சிக் காலத்தில் குடிநீர் வழங்குவதற்குக் கூட வருமானம் போதாத சபைகளும் உள்ளமையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.