ஊடக நிறுவனங்களில் பணியாற்றும், அரச பணியாளர்கள் தொடர்பான, தகவல்களை திரட்டும் நடவடிக்கையில், வடக்கு மாகாண சபை இறங்கியுள்ளது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், வட மாகாணசபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு இது தொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கு மாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தமது பணிக்கு புறம்பாக, பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ ஊடக நிறுவனம் ஒன்றில் செய்தியாளராகவோ, அறிவிப்பாளராகவோ, ஆசிரியராகவோ பணிபுரியும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல்களை வழங்க மறுப்பவர்களுக்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.