சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகிய தகவல்களை காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் சாரதிக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனால் அவர் நேற்று நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
எனினும், இது பொய்யான செய்தி என்ற தெரிவித்துள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண, காவல்துறை மா அதிபர் இப்போதும் தனது பணியில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை,, சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் 150 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மற்றொரு நாளிதழில் வெளியாகிய செய்தியையும் அவர் நிராகரித்துள்ளார்.