உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ஆய்வு செய்யும் போது, சிறிலங்காவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாகும் கட்டத்தை எட்டியுள்ளது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவுக்கு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போது, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே, சமூகத்தில் இருந்தே கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என்றும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித அளுத்கே, குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம பகுதியில் வீடுகளில் இருந்து தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என்றும், சமூகத்துடன் வாழ்ந்த பலர் தமது வீடுகளிலேயே உயிரிழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.