அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இந்த இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்த சகலருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்
தன்னை காவல்துறையினர் கைது செய்வதில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்து முன்பிணை கிடைக்கப்பெற்ற நிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் அபிவிருத்திக்கு ஒருபோதும் தடையில்லை. எமது மக்கள் நீண்ட காலமாக அபிவிருத்தியில் புறந்தள்ளப்பட்டே இருக்கின்றனர்.
அப்படியிருக்க எமது சபையினால் முழுமையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு நிதி வளம் போதாது என்பது சகலரும் அறிந்த விடயம்.
இந் நிலையில் எமது பகுதிகளுக்கு அற்பசொற்பமான அபிவிருத்திகளே தென்னிலங்கையுடன் ஒப்பிடும் போது மத்திய அரசிடம் இருந்து கிடைக்கின்றன.
வழங்குகின்ற அபிவிருத்திகளை நாட்டின் அதிகாரப்பகிர்வு வழிவகைகளில் ஒன்றாக அமைகின்ற உள்ளூராட்சி மன்றகளின் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறாது நடைமுறைப்படுத்துங்கள் என்றே கேட்கின்றோம்.
உள்ளூராட்சி மன்றங்களைப் புறந்தள்ளி அரசியல் நோக்கங்களுக்காக மாத்திய அரசாங்கத்தின் பொறிமுறை செயற்படக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.