ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்றபோதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை பெரும்பான்மையோரே தீர்மானிக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இதுதான் நிலைமை. என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைவருக்குமான நீதி என்பது இந்த நாட்டில் இல்லை. பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது. சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காக ‘நீதி’ தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2021ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொடூரமாகவும் இரக்கம் இன்றியும் கொலைசெய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தமக்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.