வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோசைக் கைது செய்யும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிராக இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில், சபையின் அனுமதி பெறாமல், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் ஏற்பாட்டில், வீதி திருத்த காட்சிப் பாதாகை ஒன்று அமைக்கப்பட்டது.
அனுமதி பெறாது அமைக்கப்பட்ட, அந்தக் காட்சிப் பதாகையை தவிசாளர் நிரோஷ் அகற்றியிருந்தார்.
அதற்கு எதிராக பொலஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, தவிசாளரைக் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எனினும், தவிசாளர் நிரோஷ், நீதிமன்றத்தை நாடி தனது கைதுக்கு எதிராக, நேற்று முன்பிணை அனுமதியைப் பெற்றிருந்தார்.
தவிசாளரைக் கைது செய்து சிறையில் அடைக்கும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, இன்று அவருக்கு எதிராக அச்செழு வாழ் மக்கள் என சிலரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
பிரதேச சபைக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வெள்ள நிவாரணம் தருவதாக கூறி மக்கள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டதாக, வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் ஏற்பாட்டிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.