இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி முல்லைத்தீவு கரையை அண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அண்மைய நாட்களாக இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள், முல்லைத்தீவு கரையில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவு வரை வந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியப் படகுகளின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா கடற்படையினர் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இறால் அதிகளவில் பிடிக்கப்படும் காலம் ஆரம்பிக்கும் நிலையில், இந்திய இழுவைப் படகுகள் இறால் வளத்தை அழித்து வருவதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைத் தடுத்து நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், வேண்டுகோள் விடுத்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தவறினால், வரும் 15ஆம் திகதி முதல் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.